over 8 years ago by Manthri.lk - Research Team under in ஆய்வறிக்கை

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை அடைந்து விட்டது. இருந்தபோதும் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் முன்பு காணப்பட்ட அதே குழப்பநிலையையே மீண்டும் தோற்றுவித்துள்ளது. அவற்றின் சிலவற்றை பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்.

• ஒரு நிறுவனத்தில் காணப்படும் வேலைவாய்ப்புக்கான இடைவெளியை நிரப்ப பொருத்தமான நபர் ஒருவரை சிபாரிசு செய்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிற்கு ஒரு கடிதத்தை வெளியிடலாமா?

• ஒரு பாராளுமன்ற உறுப்பினரிற்கு பொது மக்களை பிரதிநிதிப்படுத்துவதிலும் பார்க்க தமது கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களிற்கு முன்னுரிமை வழங்கலாமா?

• ஒரு கொடையாளி நல்லென்னத்துடன் வழங்கும் பரிசொன்றை ஒரு பாராளுமன்ற உறுப்பினரிற்கு பெற்றுக் கொள்ள முடியுமா?

• திடீர் என கோபம் வரும் சந்தர்ப்பம் ஒன்றில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரிதொரு நபரைத் தாக்க தாக்கினால் தவறில்லையா?

மேற்குறித்த கேள்விகளைத் தொடுக்கும் நபரொருவர் பெறக்கூடிய மிகச் சரியான விடைப்பத்திரமாக பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான ஒழுக்கக்கோவை அமையும்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த 100 நாள் வேளைத்திட்டத்தில் இதற்கு ஒரு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிடப்பட்ட கால இடைவெளிக்குள் அதனை நடைமுறைப்படுத்தாவிடினும் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளவில் இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்த 'திறந்த அரசுக் கூட்டு' (Open Government Partnership) இன் பின்னணியில் அது பற்றி கதையாடல் மீண்டும் மேலெழுந்தது. கடைசியாக கடந்த ஏப்ரல் 6ம் திகதி சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான ஒழுக்கக் கோவையை சபையில் சமர்பித்ததனைத் தொடர்ந்து  அது பற்றிய எதிர்பார்ப்புக்கள் மறுபடியும் சூடுபிடித்துள்ளது. 

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு சிவில் சமூகத்தின் அங்கத்தவர்களே நேரடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இதனால் அவர்களது நடத்தைகள், பிற்போக்குத்தனங்கள் மற்றும் அறிக்கைகள் என்பவற்றிற்கு விஷேட வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு நாட்டின் ஜனநாயகத்தன்மையின் இயல்பு அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிற்கும் அதன் சிவில் சமூகத்திற்கும் நேரடியாக பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளனர். மேலே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டியவாறு மக்கள் மத்தியில் காணப்படும் கேள்விகளிற்கு  ஒழுக்க விழுமியங்களிற்கு உட்பட்டதும் ஜனநாயகத்தன்மை மிக்கதுமாக விடைகள் இதன் காரணமாகவே தேவைப்படுகின்றது.  

ஒரு நாட்டில் அரச தொழில்களில் மற்றும் இதர சேவைகளில் வேலையாட்களை உள்வாங்குவதற்கு குறித்த செயன்முறை இருக்கும் பட்சத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து பெறும் சிபாரிசுக் கடிதம் மூலம் அவ்வேலை வாய்ப்பை நிரப்வுவது சட்டத்திற்கு விரோதமானதுடன் அவ்வாறு கடிதம் வெளியிடுவது ஒழுக்க விழுமியங்களிற்கும் முரணானதாகும். நாட்டின் சகல பிரஜைகளையும் பாரபட்சமின்றி பிரதிநிதித்துவப்படுத்துவதனை விடுத்து தமது அரசியல் கட்சி மற்றும் கட்சி அங்கத்தவர்களை முன்னுரிமைப்படுத்தும் செயல் பிழையென தானாகவே உணர்ந்து அவ்வாறு நடந்து கொள்ளாத ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட உறுப்பினர்கள்  பாராளுமன்றத்திற்கு தேவைப்படுகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்தினுள்ளும் முற்கோபம் கொள்ளாது  கௌரவமாக பிறருடன் பேசிப் பழகும் உறுப்பினர்கள்  காணப்படுதல் ஜனநாயகம் மிக்க ஒரு ஆட்சியொன்றிற்கு விலை மதிக்க முடியாக சொத்தாகும். தம் சொத்து மற்றும் வருமானம் என்பவற்றை வெளியிடுவதுடன் தமக்குக் கிடைக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் இதர பொருளாதார உதவிகளின் விபரங்களையும் வெளியிட்டு ஒழுக்கவிழுமியங்களுடன் நடக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பாரிய பங்களிப்பு செலுத்துவர்.

ஒழுக்கநெறிகளை மதிப்பவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆவர்

அவுஸ்திரேலியாவின் நிவு சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் ஆளுனராக கடமையாற்றிய பெர்ரி ஓ'பெரல் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாம் விலை கூடிய வயின் வகையொன்றை பரிசாகப் பெற்றதை வெளியிடத் தவறியமைக்காக தப்பை ஒத்துக்கொண்டு தமது பதிவியி;ல் இருந்து இராஜினாமா செய்தார். கணடிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய டீன் டெல் மெஸ்டிரோட் தேர்தல் பிரச்சாரச் செலவுகளிற்காக நிர்ணயிக்கப்பட்ட 5000 டொலர்களை விட அதிகமான தொகையை செலவு செய்ததுடன் அதனை மறைத்த குற்றச்சாட்டிற்காக 2015ம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஒரு மாத சிறைத்தண்டனைகக்குட்படுத்தப்பட்டும் நான்கு மாதங்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.

நாம் சிறிய விடயமாகக் கருதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடும் பணவிரயம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிற்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களும் ஜனநாயக சமூகக் கட்டமைப்பிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அது விலைகூடிய பரிசுகளை வழங்கிய குறித்த நபரிற்கு சார்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது. அசாதாரணமாக தொகையினை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவளித்தலின் மூலம் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவது உண்மையான மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு தடையான காரணியாக அமைகின்றது. 

அனைத்தும் தயாரா?

கடந்த வருடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறந்த ஜனநாயக சமூகமொன்றை உருவாக்க பாடுபடும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து மார்ச் 12 இயக்கம் என்ற பெயரில் ஊழலற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட இடமாக பாராளுமன்றத்தை உருவாக்கல் மற்றும் அதன் முக்கியத்துவம் என்வற்றை சுட்டிக்காட்டினர். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் 16 மக்கள் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றமையாகும். இது ஒரு ஒழுக்கநெறி மிக்க உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினை நோக்கிச் செல்வதற்கான சிறந்த ஆரம்ப முயற்சியாகும்.  இது புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் 100 நாள் வேளைத்திட்டத்தின் முக்கியமான ஒரு விடயமாக கருதப்பட்ட ஒழுக்க நெறிக் கோவை பற்றிய யோசனைகளிற்கு அரசாங்கத்தின் அனுமதியை வெளிப்படுத்தியது. அத்துடன் இவ் அரசாங்கத்தினை அழைக்கும் 'நல்லாட்சி' என்ற அடைமொழியை யாப்புச் சீர்திருத்தத்திலும் நிலைநாட்ட இது வழிவகுக்கும். 

ஜனநாயக சமூகமொன்றில் பொதுமக்களின் பிரதிநிதித்துவத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல ஒழுக்கநெறியுடன் கடமை புரியும் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருத்தல் முக்கியமானதாகும். எனவே மக்கள் பிரதிநிதிகளிற்கான ஒழுக்கநெறிக்கோவை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டு தம் பிரதிநிதிகளிற்கு அதற்கு உடன்பட்டு செயற்படுமாறு கோரிக்கைவிடுக்கும் ஒரு சமூகம் அவசியமாகும். அது தேர்தல் சீர்திருத்தத்தினை மாத்திரம் கொண்டு சிறந்த பாராளுமன்றத்தை உருவாக்கும் முயற்சியிலும் பார்க்க முன்னேற்றகரமானதாகும்.